பெண் காவலர்கள் பாதுகாப்பில் திருச்சிக்கு போகும் சவுக்கு சங்கர்.. பாயும் வழக்குகள்.. ஜாமினுக்கு கூட வாய்ப்பில்லை
நேதாஜி பேரவை வழக்கறிஞர் முத்து அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கு என மொத்தமாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 வழக்குகள் சவுக்கு சங்கர் மீது மட்டும் பதியப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் பாதுகாப்பில் திருச்சிக்கு அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கடந்த மே 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து அவருடைய பேட்டிகளை ஒளிப்பரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மே 3ஆம் தேதி காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்த புகாரில், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மே 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அப்போது அவர் தங்கியிருந்த அறையில் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சவுக்கு சங்கரையும் அவருடன் இருந்த இருவரையும் வாகனத்தில் கோயம்புத்தூருக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது திருப்பூர் அருகே விபத்து ஏற்பட்டது. இதில் 2 காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதேவேளையில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் பதியப்பட்டது. இதில் மே 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே மே 6ஆம் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவருக்கு வலது கையில் எழும்புமுறிவு ஏற்பட்டது என தெரிவித்தார். இதன்பின் சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து, அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து அரசு அதிகாரிகள் விளக்கமளிக்க வலியுறுத்தினார்.
இதன்பிறகு சவுக்கு சங்கர் மேலும் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக மே 6ஆம் தேதியன்று சேலத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் அளித்த புகாரில், மே 8ஆம் தேதி திருச்சி முசிறியைச் சேர்ந்த காவல்துறை டிஎஸ்பி அளித்த புகார் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக முன்னேற்றப்படை என்ற கட்சியை நடத்தி வரும் வீரலட்சுமி என்பவர் அளித்த புகாரில் மே8ஆம் தேதி சங்கர் மீது ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மே 10ஆம் தேதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கிளாம்பாக்கம் குறித்து போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு அவதூறு கருத்துகளை சங்கர் பரப்பியதாக புகார் அளித்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீர் ராய் ரத்தோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான அறிக்கை மே 12ஆம் தேதி கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டது. இதனிடையே மே10ஆம் தேதி டெல்லியில் வைத்து பெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்.
தற்போது நேதாஜி பேரவை வழக்கறிஞர் முத்து அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கு என மொத்தமாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே திருச்சியில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜர்ப்படுத்த சவுக்கு சங்கர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சிக்கு பெண் காவலர்கள் பாதுகாப்பில் அழைத்துச்செல்லப்பட்டார். தொடர்ந்து அவர் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் திருச்சி சைபர் கிரைம் காவல்துறையால் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இப்படி அடுக்கடுக்கான வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளதால் குறைந்தது ஒரு வருடத்திற்கு சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட வாய்ப்பே இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?