தமிழக சட்டசபைக்கு மார்ச் மாதம் தேர்தல் ? 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு
தமிழக சட்டசபைக்கு மார்ச் மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாற்றி அமைக்க பள்ளிகல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதே போன்று சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த உள்ள வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. மேலும், அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி முடித்து இருக்கிறது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் அரசு விடுமுறை, பண்டிகைகள். தேர்வு தேதிகள் உள்ளிடவைகளை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தலை மார்ச் மாதம் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மார்ச் மாதம் தொடங்க உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேதிகளை மாற்றம் செய்ய பள்ளிகல்வித்துறை ஆலோசித்து வருவதாக டிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

