சாஹிப் அல் ஹசனுக்கு தனது பேட்டைப் பரிசளித்த கோலி
வங்கதேச ஆல்ரவுண்டரான சாஹிப் அல் ஹசன் கிரிகெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு தனது கையொப்பமிட்ட பேட்டைப் பரிசளித்தார் இந்திய வீரர் விராட் கோலி.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டி இன்று நடந்து முடிந்தது. இத்தொடரை 2 - 0 என்கிற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரும், முன்னாள் கேப்டனுமான சாஹிப் அல் ஹசனுக்கு விராட் கோலி தனது பேட்டில் கையொப்பமிட்டுப் பரிசளித்தார்.
தற்போது வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் சாஹிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாஹிப், ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். அரசியல் சிக்கல்கள் காரணமாக அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு வெளியேறும் வரை தான் வேறு எந்தப் போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை என்று சாஹிப் அறிவித்துள்ளார். வங்கதேசம் அடுத்து விளையாடவிருக்கிற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியிலும் தான் விளையாடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
கான்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே அவர் வெளிநாட்டில் விளையாடும் கடைசிப் போட்டியாகும். கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறும் இவருக்கு முறையான பிரியா விடை கொடுக்கிற சூழல் வங்கதேச அரசியலில் இல்லை. இந்நிலையில், சாஹிப் அல் ஹசனுக்கு விடை கொடுக்கும் விதமாக விராட் கோலி தனது பேட்டினைப் பரிசளித்திருக்கிறார்.
விராட் கோலி அளித்த பேட்டினை பெறும் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார் சாஹிப். அவர் இந்திய கிரிகெட் ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர். ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இது வரையிலும் மொத்தம் 71 ஐபிஎல் போட்டிகளில் களமாடியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ஷகிப் அல் ஹசன் முழுமையாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?