எங்களை எல்லாம் தவிக்க விட்டு எங்கே போனீங்க மாமா!-முரசொலி செல்வம் குறித்து உதயநிதி உருக்கம்
கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நாங்களும் நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம் மாமா.
கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நாங்களும் நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம் மாமா என முரசொலி செல்வம் மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க... செல்வம் மாமா! திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் 'முரசொலி' செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன். வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. கலைஞரின் கொள்கை வார்ப்பு. கழகத் தலைவர், முதலமைச்சரின் வழிகாட்டி, செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர். 'முரசொலி' செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல. திமுகவுக்கே பேரிழப்பு.
கலைஞருக்கு முரசொலி மாறன் மாமா மனசாட்சி என்றால், நம் தலைவருக்கு தோளோடு தோள் நின்ற கொள்கை வீரர் செல்வம் மாமா. சிறியவர் பெரியவர் வித்தியாசமின்றி எல்லோரிடமும் மரியாதையுடன் பேசுகிற வழக்கத்தைக் கொண்டவர் அவர். அண்ணா, கலைஞர், முரசொலி மாறன் ஆகியோர் வழியில் திரைத்துறையின் வழியாகவும் கொள்கை வளர்த்தவர். முரசொலியின் முகங்களில் முக்கியமானவர். எனினும், இளையோரின் கருத்துக்களை உள்வாங்கிடவும் அவர் தவறியதில்லை.
எதையுமே எளிய மக்களின் பார்வையிலிருந்து அணுக வேண்டும் என்ற 'உங்களின் குரல்' இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது மாமா! கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நாங்களும் நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம் மாமா. எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கே போனீங்க மாமா! என்றும் உங்கள் நினைவுகளோடு உதய்” என உருக்கமாக கூறியுள்ளார்.
What's Your Reaction?