ஒரு சிறுத்தை.. வேட்டையாட கிளம்பிய எட்டு நாய்கள்.. மயிலாடுதுறையில் பரபர தேடுதல் வேட்டை

மயிலாடுதுறையில் கருவேலங்காடு சிறுத்தை நடமாடிய பகுதியில் தற்போது 8 மோப்பநாய்கள் மற்றும் வேட்டை நாய்கள் கொண்டு செல்லப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Apr 6, 2024 - 17:14
ஒரு சிறுத்தை.. வேட்டையாட கிளம்பிய எட்டு நாய்கள்.. மயிலாடுதுறையில் பரபர தேடுதல் வேட்டை

மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று  நடமாட்டுவதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சிறுத்தையின் காலடி தடத்தை வைத்து சிறுத்தை ஊருக்குள் வந்துள்ளதை உறுதி செய்தனர். 

இதனால் அந்த பகுதியில் பதற்றமும் அச்சமும் நிலவியது. வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து  சிறுத்தையை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

நேற்று அதிகாலை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் சிறுத்தை கடந்து சென்றதை பார்த்ததாக  அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டனர்.  ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறுத்தையை பிடிப்பதற்கு வன உயிரின காப்பாளர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக அனுபவமுள்ள வன பணியாளர்கள் கள தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுத்தை நடமாட்டம் உள்ள செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு மற்றும் ஊர்குடி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து 16 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர். இப்பகுதியில் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தைப் பிடிக்கும் பெரிய அளவிலான 3 கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. 

சிறுத்தைப் புலியை பிடிப்பதற்கு 13 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனிடையே நேற்று சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. ஆடு கொல்லப்பட்டிருந்த தன்மையை ஆராய்ந்த வனத்துறையினர் ஆட்டை சிறுத்தை கொன்று இருக்க 70 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் கால்தடங்கள் இல்லாததால் உறுதியாக சொல்லமுடியாது கூறியுள்ளனர்.

தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதியில் நேற்று இரவு 3 கூண்டுகளில் ஆடுகள் மற்றும் இறைச்சியை வைத்து  சிறுத்தை அகப்படுமா என்று வனத்துறையினர் காத்து வருகின்றனர். இந்நிலையில்தான் இன்று காலை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள கூட்ஸ் யார்ட் பிளாட்பார்மில் ஒரு ஆட்டினை அடித்து சிறுத்தை தின்றதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இப்பகுதியில் ஆடுகளை நாய்கள் கடித்து குதறி கொல்லும் என்று கூறப்படும் நிலையில் ஆட்டின் தலை மற்றும் முன் கால்கள் கைப்பற்றப்பட்டது. 

சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லாததால் சிறுத்தை தான் கொன்றது என்பதை உறுதிப்படுத்த இயலாது என்று வனத்துறையினர் கூறினர். நாய் கடித்து கொன்று இருக்க வாய்ப்புள்ளதாகவும், தடயங்கள் எதுவும் இல்லாததால் சிறுத்தை தான் அடித்துக் கொன்றது என்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.


தற்போது ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு சிறுத்தை நடமாடிய பகுதியில் தற்போது 8 மோப்பநாய் மற்றும் வேட்டை நாய்கள் கொண்டு செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்ந்து கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் முனைவர் நாகநாதன் ஐஎஃஎஸ் சிறுத்தை நடமாடிய  ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதிக்கு நேரிடையாக வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டுள்ளது எனவும் சிறுத்தைக்கு வேறு இடத்தில் கூண்டு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஒரு சிறுத்தையை பிடிக்க எட்டு மோப்பநாய்களுடன் வனத்துறையினர் களமிறங்கியுள்ளது மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow