எதற்கும் அஞ்சமாட்டோம்.. எங்களுக்கு எழுச்சி., அவங்களுக்கு பாதிப்பு !.. சொல்கிறார் செல்வப்பெருந்தகை
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி குமாரை ஆதரித்து, ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேர்தல் பரப்புரை செய்த அவர் எதற்கும் அஞ்சாமல் பிரசாரம் செய்து வருவதாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாஜகவை பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி குமாரை ஆதரித்து, ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேர்தல் பரப்புரை செய்த அவர் எதற்கும் அஞ்சாமல் பிரசாரம் செய்து வருவதாக கூறியுள்ளார்.
தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி குமார் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் சிட்டிங் எம்.பியாக திமுகவின் தனுஷ் எம்.குமார் உள்ள நிலையில், புதிததாக மருத்துவர் ராணிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடயநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்நிலையில், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை ஆதரித்து 2 நாட்களாக பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ஸ்ரீவில்லிப்புத்தூரில் தென்காசி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ஊழலை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், உலகத்திலேயே மிகப்பெரிய தேர்தல் பத்திர ஊழலை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். அத்துடன், இந்தியா கூட்டணி மக்களை நம்பி உள்ளதாக தெரிவித்த அவர், பாஜக அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமானவரித்துறையை நம்பி நிற்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாஜகவை பாதிக்கும், எங்களுக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும், விருதுநகரில் கடந்த 2 நாட்களில் 20 முறைக்கு மேல் போலீசார் எங்களின் வாகனங்களை சோதனை செய்தார்கள் எனவும், நாங்கள் எதற்கும் அஞ்சாமல் அனைத்துக்கும் ஒத்துழைத்தோம் என்றும் கூறினார்.
What's Your Reaction?