முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் பல நாட்களாக போராடி வருகின்றனர்.
அந்தவகையில், இன்று காலை சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவல் வாகனத்தை ஏற மறுத்து இடைநிலை ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வாளகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
What's Your Reaction?

