உதயநிதி என்ன கிள்ளுக்கீரையா? – கொதித்த நாஞ்சில் சம்பத்!
அமைச்சர் உதயநிதி ஒன்றும் கிள்ளுக்கீரை அல் என்றும், விரைவில் துணை முதல்வராக பதவி ஏற்று ஸ்டாலின் சுமையை பகிர்ந்து கொள்ள இருக்கிறார் என்றும் நாஞ்சில் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை நூரே ஹிதாயத்துல் இஸ்லாமியா மஸ்ஜித் சார்பில் சமய நல்லிணக்க விழா லாஸ்பேட்டை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமய நல்லிணக்கம் பற்றி உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமாகாது. இதனால் இந்தியா பிளவுப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள், அப்படியானால் ஹரியானாவில் தேர்தல் நடக்கிறது மகாராஷ்டிராவில் ஏன் நடத்தவில்லை?. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை இது முட்டாள்தனமான முடிவு” என்றார்.
மேலும், “ராகுல் காந்தியை அச்சுறுத்தியோ உயிர் பயத்தை காட்டியோ அவரை மிரட்ட முடியாது. தற்போது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். நாளை அவரே பிரதமராக வருவார் என்பதனை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு மகக்தான வெற்றி பெறும். 2 லட்சம் பெண்களை திருமாவளவன் திரட்டுகிறார். மாநில சுயாட்சி டெல்லியில் எதிரொலிப்பது போல மது விலக்கு தேசிய அளவில் எழுச்சியாக அமையும்” என்று நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளதாக வெளியாகி வரும் தகவல் குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “உதயநிதி ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல, நீட்டுக்கு எதிரான தலைவர். அதனால் விரைந்து வேகமாக ஸ்டாலின் சுமையை பகிர்ந்து கொள்வார். விரைவில் உதயநிதி துணை முதல்வராக பதிவு ஏற்பார்” என்று கூறினார்.
இறுதியாக, விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்த நாஞ்சில் சம்பத், திருப்பதி லட்டு விவகாரம் குறித்து எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று புறப்பட்டு சென்றார்.
What's Your Reaction?