அமித் ஷாவின் தமிழக பயணம் திடீர் ஒத்திவைப்பு... என்ன காரணம்..?

Apr 3, 2024 - 20:46
அமித் ஷாவின் தமிழக பயணம் திடீர் ஒத்திவைப்பு... என்ன காரணம்..?

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொள்ள இருந்த பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு பாஜக தனது தலைமையில் பலமான கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (ஏப்ரல் 4) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 5) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2 நாட்கள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகை தரும் அமித் ஷா, தேனி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில்  ரோட் ஷோ நிகழ்ச்சி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டது. 

இதற்காக, தேனி வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும், தேனி ரயில்வே கேட் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கியில் இருந்து பங்களாமேடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இரும்புக் கம்பிகளால் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ரோட் ஷோ நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், அமித் ஷாவுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அவரது தமிழக பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அமித் ஷாவின் அடுத்தக்கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow