ஓசியில் மது கொடுக்க மறுத்த டாஸ்மாக் ஊழியர் வெட்டிக்கொலை... கோவில்பட்டியில் பரபரப்பு...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓசியில் மதுகொடுக்க மறுத்த டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

May 8, 2024 - 21:03
ஓசியில் மது கொடுக்க மறுத்த டாஸ்மாக் ஊழியர் வெட்டிக்கொலை... கோவில்பட்டியில் பரபரப்பு...

கோவில்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணாநகர் பெத்தேல் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் அருகே காந்திநகரை சேர்ந்த முருகன் என்பவர் பார் நடத்தி வருகிறார். இந்த பாரில் இந்திரா நகரை சேர்ந்த  குருசாமி என்ற 60 வயது முதியவர் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில், இந்த டாஸ்மாக் பாருக்கு கயத்தாறு சிதம்பரம்பட்டியை சேர்ந்த மூக்கையா பாண்டியன் என்பவர் கடந்த சில தினங்களாக வந்து மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். வழக்கம்போல இன்று (08.05.2024) நண்பகல் 2 மணியளவில் டாஸ்மாக் பாருக்கு வந்த மூக்கையா பாண்டியன், மது கேட்டுள்ளார். பணம் கொடுத்தால் தான் மது கொடுக்க  முடியும் என பார் ஊழியர் குருசாமி தெரிவித்துள்ளார். 

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் மூக்கையா பாண்டியன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பார் ஊழியர் குருசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பார் ஊழியர் குருசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த தடயங்களையும் சேகரித்த போலீசார், தலைமறைவாகியுள்ள மூக்கையா பாண்டியனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட பாரை,  மூக்கையா பாண்டியன் முதலில் எடுத்து நடத்தியதாகவும், அப்போது, பாரில் விற்கப்படும் மதுவுக்கான பணத்தை முறையாக செலுத்தாததால், முருகன் பாரை தனது கட்டுப்பாட்டில் எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால், கோபமடைந்த மூக்கையா பாண்டியன், பாருக்கு அடிக்கடி வந்து மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றதை தட்டிக்கேட்ட நிலையில், ஆத்திரமடைந்து, குருசாமியை வெட்டிக் கொலை செய்துவிட்டு மூக்கையா பாண்டியன் தப்பிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow