மகளின் கர்ப்பத்துக்கு தந்தை காரணம் என பொய் புகார்-தாய்க்கு 5 ஆண்டுகள் சிறை

போலி மருத்துவ ஆவணங்களைத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தாயை குற்றவாளி எனக்கூறி,5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

Feb 8, 2024 - 10:17
Feb 8, 2024 - 10:45
மகளின் கர்ப்பத்துக்கு தந்தை காரணம் என பொய் புகார்-தாய்க்கு 5 ஆண்டுகள் சிறை

மகளின் கர்ப்பத்துக்கு தனது கணவர் தான் காரணம் என பொய் வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தனது மகளின் கர்ப்பத்திற்கு, தனது கணவரே காரணம் என, பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தது. 

இதற்கிடையில், தன்மீதான பாலியல் வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் தந்தை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறுமியின் தாய் அளித்த மருத்துவமனை சிறுநீர் அறிக்கை மற்றும் மருத்துவரின் அறிக்கைகள் தவறானவை என்றும், அவர் செவிலியராக பணியாற்றிய அதே மையத்தில் போலியாக சான்றிதழ்களை உருவாக்கியதும் தெரியவந்தது. 

மேலும், அவரின் மகளின் வாக்குமூலத்தை கேமரா மூலம் பதிவு செய்ததுடன், அந்த பெண் தனது கணவரை பழிவாங்குவதற்காக ஆவணங்களை போலியாக உருவாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண்ணின் தாய் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இந்நிலையில், பாலியல் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, கணவரை பழிவாங்கும் நோக்கத்தில், போலியாக பொய் வழக்கு தொடுத்து போலி மருத்துவ ஆவணங்களைத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக தாயை குற்றவாளி எனக்கூறி, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow