நிறவெறி சர்ச்சைக்கு கிளம்பிய எதிர்ப்பு...ராஜினாமா செய்த சாம் பிட்ரோடா...விளக்கம் அளித்த காங்கிரஸ் தலைமை

தென்னிந்தியர்கள் தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.

May 8, 2024 - 20:54
நிறவெறி சர்ச்சைக்கு கிளம்பிய எதிர்ப்பு...ராஜினாமா செய்த சாம் பிட்ரோடா...விளக்கம் அளித்த காங்கிரஸ் தலைமை

காங்கிரஸ் கட்சியின் அயலக அணியின் பொறுப்பாளரான சாம் பிட்ரோடா, தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களை போலவும், கிழக்கிந்தியர்கள் சீனர்களை போலவும், மேற்கிந்தியர்கள் அரேபியர்கள் போலவும், வட இந்தியர்கள் வெள்ளையர்களை போலவும் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பெரும் சர்ச்சையாக வெடித்தது. 


இதுதொடர்பாக பிரதமர் மோடி முதல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவை சேர்ந்த பலரும் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வந்தனர். 


அதன்படி, தெலங்கானாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தென்னிந்தியர்களை நிறத்தை வைத்து காங்கிரஸ் விமர்சிக்கிறது என்றும், இந்த இனவெறி கருத்து குறித்து காங்கிரஸும், ராகுல் காந்தியும் பதிலளிக்க வேண்டும் எனவும் பேசினார். மேலும், தமிழ் கலாசாரம் குறித்து பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக காங்கிரஸுடன் உறவை முறித்துக் கொள்ள தயாரா எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். 


இதேபோல், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியா ஆக்கிரமிப்பாளர்களின் நாடு, அதற்கு தனித்துவம் இல்லை என காங்கிரஸ் கட்சி கட்சி நம்புவதாகவும், அக்கட்சியின் தலைவர்களின் சிந்தனையையே இந்த கருத்து பிரதிபலிப்பதாகவும் X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதில், I am a Dark-skinned Bharatiya! எனவும் குறிப்பிட்டு, பிட்ரோடாவுக்கு பதிலளித்திருந்தார். 


இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துகள் துரதிஷ்டவசமானது என்றும், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறியிருந்தார்.  


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் தென்னிந்தியாவை சேர்ந்தவள், ஆனால் நான் இந்தியனாக தான் தெரிகிறேன் என்றும், எனது குழுவில் வடகிழக்கு, மேற்கு என அனைத்து பகுதியை சேர்ந்தவர்களும் இந்தியனாகவே தெரிவதாகவும் பதிவிட்டுள்ளார். உங்கள் இனவெறி சிந்தனைகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி என்றும், இது இந்தியா கூட்டணிக்கு மிகவும் வெட்கக்கேடு எனவும் குறிப்பிட்டிருந்தார். 
 

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு,  சாம் பிட்ரோடாவின் கருத்து, இந்தியாவைப் பிளவுபடுத்தும் தொனியில் இருக்கிறது என்றும், இது வெட்கக்கேடானது எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


இந்நிலையில், பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் சாம் பிட்ரோடா, காங்கிரஸ் கட்சியின் அயலக அணியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், சாம் பிட்ரோடா, காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் பதவியில் இருந்து விலக சுயமாக முடிவு செய்துள்ளார் என்றும், காங்கிரஸ் தலைவர் அவரது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow