ஆம்புலன்ஸ் பின்னால் அமர்க்களமாக நடந்த பைக் ரேஸ்
ஒரு ஆம்புலன்ஸ் வண்டியை வாடகைக்கு பிடித்து அதை சைரன் ஒலித்தபடி ஓட விட்டு பின்னால் ரேஸ் நடத்தியிருக்கிறார்கள்.
தென்காசி அருகே ஆம்புலன்ஸ் பின்னால் பைக் ரேஸ் சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 19ம் தேதி தென்காசி மாவட்டம், சிவகிரி போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது ஒரு ஆம்புலன்ஸ் படு வேகமாக சைரன் அடித்தபடி வந்து கொண்டிருந்தது.உடனே பேரிகார்டை எடுத்து ஆம்புலன்சுக்கு வழிவிட்டுள்ளனர்.ஆம்புலன்ஸ் போலீஸ் செக்போஸ்டை கடக்கும்போது தற்செயலாக ஒரு போலீஸ்காரர் அதைப்பார்த்திருக்கிறார்.உள்ளே நோயாளி யாருமில்லை,வெற்று ஆம்புலன்ஸ்தான் சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் முன்பு விலை உயர்ந்த பைக்குகளில் இளைஞர்கள் ஆம்புலன்ஸ் பின்னால் அணி வகுத்துச்சென்றிருக்கிறார்கள்.
இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, உடனடியாக தென்காசி போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாய் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் குத்துக்கல் வலசையில் தடுப்புக்கள் அமைத்து காத்திருந்தனர்.அரை மணி நேரத்தில் அதே ஆம்புலன்ஸ் வந்தது. அதை மடக்கிய போலீசார் உள்ளே நோயாளி யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, டிரைவர் மணியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது சர்..சர்ரென படு வேகமாக பத்து பைக்குகள் சீறிப் பாய்ந்து வந்தன. பைக்குகளையும் போலீசார் மறித்து விசாரணை செய்த போதுதான் அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் வண்டியை பகடைக்காயாய் பயன்படுத்தி பைக் ரேஸ் நடத்தியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நம்மிடம் கூறுகையில், “இளைஞர்கள் அனைவரும் சிவகாசியை சேர்ந்தவர்கள். அதில் மாணவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.அவர்கள் வழக்கமாக மதுரை-நெல்லை சாலையில் பைக் ரேஸ் நடத்துவது வழக்கம்.இப்போது குற்றாலத்தில் தண்ணீர் விழுவதால் சிவகாசி-குற்றாலம் பைக் ரேஸ் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள். அது திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன போக்குவரத்து அதிகமிருக்கும், வேகமாய் செல்ல முடியாது.எனவே ஒரு ஆம்புலன்ஸ் வண்டியை வாடகைக்கு பிடித்து அதை சைரன் ஒலித்தபடி ஓட விட்டு பின்னால் ரேஸ் நடத்தியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 10 விலை உயர்ந்த பைக்குகளும், ஆம்புலன்ஸ் வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.அவர்களிடம் விசாரணை நடக்கிறது” என்றார்.
What's Your Reaction?