திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவுக்கு போலிபாஸ்-அதிமுக குற்றச்சாட்டு

பத்து மணிக்கு மேல் வந்தால் அவர்களுக்கு அனுமதி இல்லை.அந்த வகையில் பத்து மணிக்கு மேல் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்

Nov 20, 2023 - 11:00
Nov 20, 2023 - 13:10
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவுக்கு போலிபாஸ்-அதிமுக குற்றச்சாட்டு

அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த  18ஆம் தேதி நடந்தது. சூரனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி அன்று மாலை திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நடந்தது. இந்த சூரசம்கார நிகழ்ச்சியை 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பார்வையிட்டனர்.

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் கந்த சஷ்டி விழா சர்ச்சையில் தொடங்கி சர்ச்சையிலையே முடிந்திருக்கிறது. ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்தது என்று திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழுவினர் நினைத்து இருந்த நேரத்தில் புதிய குண்டை தூக்கி வீசினார்கள் முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஆதரவாளர்கள்.

அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில். "நாங்கள் கையில் வைத்திருக்கும் பாஸ், கார் பாஸ் ஆகும். இந்த பாஸ் இருந்தால் கோவில் வளாகம் வரை சென்று விடலாம். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் கிருபாகரன் மூலம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் அலுவலகத்திற்கு 15 பாஸ் கொடுக்கப்பட்டது. அந்தப் பாசை நாங்கள் கொண்டு வந்தோம். பாசை வாங்கிப் பார்த்த போலீசார் இது போலி பாஸ் என்று எங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை.அப்படியானால் அமைச்சர் அலுவலகம் போலி பாஸ் அடித்து விநியோகம் செய்ததா? இதன் மூலம் அவர்கள் திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தை ஏமாற்றி இருக்கிறார்கள்" என்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்கள்.

இது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் கிருபாகரனிடம் கேட்டோம், "நானும் அந்த வீடியோவை பார்த்தேன்.ஆனால் அவர்கள் சொல்வது போல் நாங்கள் யாருக்கும் பாஸ் கொடுக்கவில்லை.அது எங்கள் வேலையும் அல்ல.உண்மை நிலை இப்படி  இருக்கும் போது ஏன் அவர்கள் என் பெயரையும் அமைச்சரின் அலுவலகத்தையும் தொடர்புபடுத்தி சொன்னார்கள் என்று தெரியவில்லை" என்றார்.

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகனிடம் கேட்டோம். "மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பாஸ் வழங்கப்பட்டது.ஆனால் பாசில் காலை 10 மணிக்குள் கோவில் வளாகத்திற்குள் வந்து விட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பத்து மணிக்கு மேல் வந்தால் அவர்களுக்கு அனுமதி இல்லை.அந்த வகையில் பத்து மணிக்கு மேல் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.அதைத்தான் அவர்கள் போலி பாஸ் என்று சொல்கிறார்கள்.இது உண்மைக்கு மாறான தகவல்" என்றார்.

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow