‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல் நாளில் பயனடைந்த 3,000 குழந்தைகள்!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கிய முதல்நாளில் மட்டும் 3,297 குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பயன் அளிக்கும் வகையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதலமைச்சர் விஜய் நேற்று (செப்.28) தொடங்கி வைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர், அங்கே பிறந்த குழந்தைகளுக்குத் தன் கரங்களால் ஒரு கிராம் தங்க மோதிரங்களை அணிவித்துத் தாய்மார்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு
எளிய குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் செப்.27வரை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாளில் 3,297 குழந்தைகளுக்கு மோதிரம்
மாநிலம் முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வந்த நிலையில், நேற்றைய ஒரே நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 3,297 குழந்தைகளுக்குத் தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அப்படியானால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 87 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவே முதல் நாளில் இந்த எண்ணிக்கையில் மோதிரங்கள் வழங்கப்பட்டதாகவும், இது எதிர்பார்த்ததை விடக் குறைவான எண்ணிக்கைதான் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?



