சண்டிகர் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடத்துகிறீர்களா? விளாசிய உச்சநீதிமன்றம்.. வீடியோ பதிவுகள் இன்று ஆய்வு..!

எந்த அரசியல் சார்பையும் சாராத புதிய தேர்தல் அதிகாரியை நியமிக்க துணை ஆணையருக்கு விரைவில் உத்தரவிடப்படும்

Feb 20, 2024 - 10:08
சண்டிகர் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடத்துகிறீர்களா? விளாசிய உச்சநீதிமன்றம்.. வீடியோ பதிவுகள் இன்று ஆய்வு..!

குதிரை பேரம் அரங்கேறுவது தீவிரமான குற்றச்சாட்டு என கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், சண்டிகர் மேயர் தேர்தலின் வீடியோ பதிவுகளை இன்று ஆய்வு செய்கிறது. 

பாஜக - I.N.D.I.A கூட்டணியின் நேரடித் தேர்தலான சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் 12 வாக்குகளும், பாஜகவின் மனோஜ் சோன்கர் 16 வாக்குகளும் பெற்றார்.தொடர்ந்து 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அனில் மாசிக் அறிவித்ததை அடுத்து மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் விதிகளை மீறி வாக்குச் சீட்டுகளை தேர்தல் அதிகாரி புறக்கணித்ததாக வீடியோ ஆதாரத்துடன் ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில், தேர்தல் அதிகாரி ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.இதையடுத்து மேயர் மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்தபோதும், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 3 பேர் பாஜகவில் இணைந்ததால், மறுதேர்தல் நடத்தினாலும் பாஜக வெற்றிபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு தேர்தல் அதிகாரியை இந்தியத் தலைமை நீதிபதி குறுக்கு விசாரணை செய்வது இதுவே முதல்முறை என நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. 

வாக்குச்சீட்டில் எந்த உரிமையுடன் எழுதினீர்கள் என நீதிபதி கேட்டபோது, தேவையற்ற வாக்குகளை பிரித்ததாக தேர்தல் அதிகாரி பதிலளித்தார். தொடர்ந்து புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிடாமல் ஏற்கனவே பதிவான வாக்குகளின் அடிப்படையில் முடிவுகளை அறிவிப்பதை பரிசீலிக்க நீதிபதிகள் பரிந்துரைத்தனர். குதிரை பேரம் அரங்கேறுவது தீவிரமான குற்றச்சாட்டு எனக்கூறி, எந்த அரசியல் சார்பையும் சாராத புதிய தேர்தல் அதிகாரியை நியமிக்க துணை ஆணையருக்கு விரைவில் உத்தரவிடப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை உச்சநீதிமன்றம் இன்று ஆய்வு செய்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow