"அவருக்காக தான் செஞ்சேன்.." வாக்குமூலம் அளித்த சதீஷ் - நயினாருக்கு சம்மன் அனுப்பிய போலீசார் !
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 6-ஆம் தேதி இரவு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, 3 பேர் கொண்டு வந்த பைகளில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் மேலாளராக பணிபுரியும் சதீஷும் ஒருவர்.
இதனால், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஒருபக்கம் வருமான வரித்துறையும், மறுபக்கம் தாம்பரம் போலீசாரும் விசாரணை நடத்தியதால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என்று வாக்குமூலம் கொடுத்தார்கள். ஆனால், தம்முடைய பணமில்லை என்று நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை நகல் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், கைதானவர்களின் வாக்குமூலம் படி, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் தான் அந்த ரூ.4 கோடி என்றும் பதிவாகியிருக்கிறது. அதோடு இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 171(C)- தேர்தலில் தகாத செல்வாக்கை பயன்படுத்துதல், 171(E)- லஞ்சத்திற்கான தண்டனை வழங்குதல், 171(F)- தேர்தலில் வாக்காளர்களை தவறான வழி நடத்துதல் மற்றும் 188- அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதீஷ், பெருமாள், நவீன் ஆகியோர் குற்றம் சுமத்தப்ட்டவர்கள் எனவும் கைதான சதீஷ்ஷின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புரசைவாக்கம் தாஸ் பிரகாஸ் ஹோட்டல் அருகில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலான புளூ டைமண்ட் ஹோட்டலில், தான் வேலை செய்வதாகவும், ஜெய்சங்கர் என்பவர் 500 ரூபாய் கட்டுகளுடன் கூடிய நான்கு பைகளை திருநெல்வேலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொடுத்து அனுப்பினார் என்றும் சதீஷ் வாக்குமூலம் அளித்ததாக அதில் குறப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தன்னுடன் வந்த பெருமாள், நாட்டுக்கோட்டை செட்டியார் என்ற ஹோட்டலில் இருந்து ஆசைத்தம்பி கொடுத்தனுப்பிய பணத்துடன் ரயிலில் பயணித்ததாகவும், நயினார் நாகேந்திரன் தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க தங்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் சதீஷ் அளித்த வாக்குமூலம் என முதல் தகவல் அறிக்கையில் போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும், கைதானவர்களிடம் இருந்து நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை நகல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதில் கூப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று (ஏப்ரல் 15) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், பிரதமரின் வருகையால் வர இயலாது எனக் கூறியதால், வருகிற 22-ம் தேதி ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
What's Your Reaction?