ஜாபர் சாதிக் குடோனுக்கு சீல்.. NCB சோதனையில் என்னென்ன சிக்கியது?
பல முக்கிய ஆவணங்கள், போதைப்பொருள்களை எடைபோடும் மெஷின் மற்றும் சில முக்கிய புகைப்படங்களும் சிக்கியிருப்பதாக தகவல்
சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக்கின் குடோனில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி சீல் வைத்தனர்
திமுகவின் முன்னாள் நிர்வாகியும் போதைபொருள் கடத்தல் கும்பலின் தலைவனுமான ஜாபர் சாதிக், கடந்த 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தமிழகமே அதிரும் வண்ணம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் போதைப்பொருள் கடத்தலை அவர் நடத்தியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
குறிப்பாக ஜாபர் சாதிக்கின் கைதுக்கு பின் தமிழகத்தில் அவர் பல போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை நிகழ்த்தியதாகவும், அதில் பல பிரபலங்களுக்கு தொடர்ப்பிருப்பதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. இதேவேளையில், அவர் திமுகவில் அங்கம் வகித்ததை சுட்டிக்காட்டி சரமாரியான குற்றசாட்டுகள் எதிர்கட்சிகளால் முன்வைக்கப்பட்டன.
தற்போது, ஜாபர் சாதிக்குடன் 10 வருடம் கூட்டாளியாக பயணித்த சதா என்பவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பெருங்குடியில் இவர்கள் தலைமையில் ஒரு குடோன் செயல்பட்டு வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. விசாரணையில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஜாபர் சாதிக் அதனை குடோனாக நடத்தி போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தியதை கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தி குடோனுக்கு சீல் வைத்தனர்.
இதில் பல முக்கிய ஆவணங்கள், போதைப்பொருள்களை எடைபோடும் மெஷின் மற்றும் சில முக்கிய புகைப்படங்களும் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளையில் விசாரணையும் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?