என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..? - நடிகை சமந்தா மீது பாய்ந்த மருத்துவர்
நிரூபிக்கப்படாத நாட்டு வைத்திய முறைகளைக் கூறி நடிகை சமந்தா தவறாக வழி நடத்துகிறார்
நிரூபிக்கப்படாத நாட்டு வைத்திய முறைகளைக் கூறி தனது 3.3 கோடி பாலேயர்களை நடிகை சமந்தா தவறாக வழி நடத்துவதாக கல்லீரல் நிபுணர் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா நடிப்பு மட்டுமின்றி உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆர்வமுள்ளவர். மையோசடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர், படங்களில் நடிப்பதைக் குறைத்துள்ளதோடு, ஆன்மிக சுற்றுலா, விளையாட்டு, பாட்காஸ்ட் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் சமந்தா தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கத்தில் நியூட்ரீஷியனிஸ்ட் அல்கேஷ் என்பவருடன் இணைந்து ஆரோக்கியம் தொடர்பாகவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நோக்குடனும் ஒரு வீடியோ தொடரை வெளியிட்டு வருகிறார்.
அதில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ஒரு வீடியோவில் கல்லீரலில் ஏற்படும் நச்சுத்தன்மையைக் குறைக்க டான்டேலியன் என்றழைக்கப்படும் ஒரு வகை பூண்டி செடியின் வேரை உட்கொண்டால் அது கல்லீரலின் நச்சுத்தன்மையைப் போக்கி மீண்டும், கல்லீரலைச் சீராக்கும் என அல்கேஷ் கூறுகிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், "TheLiverDoc" என்ற பெயரில் அழைக்கப்படும் கல்லீரல் நிபுணர் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், 3.3 கோடி பாலோயர்ஸ் கொண்ட சமந்தா அவர்களுக்கு நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளைக் கூறி தவறாக வழிநடத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், டான்டேலியன் ஒரு களைச்செடி, பெரும்பாலும் அது சாலட்டில் கலந்து சாப்பிடப்படுகிறது. 100 கிராம் பூவில் ஒருவருக்குத் தேவையான 10 முதல் 15 சதவீத பொட்டாஷியம் சத்தை தரலாம். மேலும், அது சிறுநீர் வெளியேறுவதில் உள்ள சிக்கலைத் தீர்ப்பதாக நமது பாரம்பரிய மருத்துவம் கூறினாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை விலங்குகளிடம் நடத்தப்பட்டுள்ள ஆய்வில் அதனால் சில நன்மைகள் இருப்பதாகக் கூறினாலும், அவை மனிதர்களுக்கு எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பதற்கு ஆதாரம் தேவை. இப்படியான சூழலில் டான்டேலியனால் கல்லீரல் நச்சுத்தன்மை குணமாகும் என கூறுவது, பலரையும் தவறாக வழிநடத்தும் செயல் என டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
What's Your Reaction?