சொல்வதை செய்யாத திமுக அரசு...வெளுத்து வாங்கிய எல்.முருகன்...

3 ஆண்டு கால ஆட்சியில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திமுக அரசு இருப்பதாக நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

Mar 28, 2024 - 07:43
சொல்வதை செய்யாத திமுக அரசு...வெளுத்து வாங்கிய எல்.முருகன்...

நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில், பாஜக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள TKV மஹாலில் நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க, அ.ம.மு.க, த.மா.கா, ஐ.ஜே.கே, புதிய நீதிகட்சி, இ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  

இந்த நிகழ்வில் பேசிய எல்.முருகன், "கடந்த மூன்று ஆண்டுகள் திமுக ஆட்சியை கண்டு மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக-வை தூக்கி எறிவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.இந்த தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். ஸ்டாலின், எடப்பாடி என்ன பிரதமராக போகிறார்களா?.  ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எப்படி பிரதமராக முடியும்" என கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர், "திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன மதுபான கடைகள் குறைப்பு, கல்வி கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவற்றை ரத்து செய்வதாக கூறினார்கள். ஆனால், வழக்கம் போல் சொல்வது எதையும் செய்யாத ஓர் ஆட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்" என்று விமர்சித்தார்.  மேலும், "கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில், சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது. மேட்டுப்பாளையத்திற்கான ரயில் சேவை வசதியினை மேம்படுத்தி உள்ளோம். மோடி மீண்டும் பிரதமரானால், அந்த சேவை தொடரும்" என்றும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow