ஊக்கத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பியுங்கள்.... தூய்மைப் பணியாளர்களுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு!
விண்ணப்பங்களைப் பரிசீலித்து அரசு உரிய முடிவை உடனே எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கொரோனா காலத்தில் அரசு அறிவித்த ரூ.15,000 ஊக்கத் தொகையை பெற, தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஒப்பந்தப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் கடுமையாக பணி செய்தனர். இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் அரசாரணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத் தொகையாக அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், குறிப்பிடப்பட்ட ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை எதிர்த்து, அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று, விருதுநகர் துப்புரவு அரசு பணியாளர்கள் சங்க சார்பாக அன்னமயில் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, அனைத்து வாதங்களையும் கேட்டதன் பின்னர், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை வழங்க கோரி, மீண்டும் தனித்தனியே தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலரிடம் மனு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், அரசு விண்ணப்பங்களைப் பரிசீலித்து உரிய முடிவை உடனே எடுக்க வேண்டும் என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.
What's Your Reaction?