CSK vs MI: தோனியின் என்ட்ரி காண கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்.. வசமாக மாட்டிய 11 பேர்!
திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 11 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 25 டிக்கெட்டுகள், ரொக்கம் ரூ.40,500/- மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று (23.03.2025) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி இரவு ஆட்டமாக நடைபெற்றது. மேற்படி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.
சேப்பாக்கம் இரயில் நிலைய பகுதிகளில் சோதனை:
D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் நேற்று (23.03.2025) சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்து, அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்து 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் முறையே, 1.மணிகண்டன்,கோடம்பாக்கம் 2.தினேஷ் குமார்,ராமநாதபுரம், 3.பாரதி கண்ணன்,தேனி மாவட்டம் 4.விஜயகோகுல்,கடலூர் மாவட்டம் 5.உதய் கிரண்,சித்தூர் 6.விமல்குமார்,இராயப்பேட்டை, 7.வாசு,சிந்தாதிரிப்பேட்டை, 8.பவண்,சிந்தாதிரிப்பேட்டை, 9.சந்திரசேகர்,தெலுங்கானா மாநிலம்.
கைது செய்யப்பட்ட 9 நபர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 20 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
எழும்பூர் பகுதிகளில் சோதனை:
இதே போல F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (23.03.2025) எழும்பூர், பொன்னியம்மன்கோயில் தெரு, ரமடா ஹோட்டல் அருகே கண்காணித்து கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்த 1.மோகன் மோத்வானி,அயனாவரம், 2.நிரஞ்சன்,மயிலாப்பூர் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 டிக்கெட்டுகள், ரொக்கம் ரூ.40,500/-மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட மேற்படி 11 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






