முக்கியமான தேர்வுகளில் முறைகேடு... கடைசி நேரத்தில் ரத்தான முதுநிலை நீட்... திணறும் NTA !

நாடு முழுவதும் கடந்த 18ம் தேதி 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வை மத்திய அரசு திடீரென ரத்து செய்தது. நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும், இது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் கூறியது.

Jun 23, 2024 - 15:51
முக்கியமான தேர்வுகளில் முறைகேடு... கடைசி நேரத்தில் ரத்தான முதுநிலை நீட்... திணறும் NTA !
முதுநிலை நீட்

டெல்லி: இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மிக கடினமான இந்த தேர்வில் வெற்றி பெற முடியாமல் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனால் சமூகநீதிக்கு எதிராக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது இந்த தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு நடந்திருப்பதாக அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதாவது எப்போதும் இல்லாத வகையில் 67 பேர் முதலிடம் பிடித்து இருந்தனர். பெரும்பாலானோர் 720க்கு 720 மதிப்பெண்களும், 720க்கு 719 மதிப்பெண்களும் பெற்றதால் சந்தேகம் எழுந்தது. அதிலும் ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பிடித்து இருந்ததால் இந்த சந்தேகம் உறுதியானது.

இதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. மேலும்  'நீட்' மறு தேர்வு நடந்த வேண்டும் என உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை (National Testing Agency), ''கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு ஜூன் மறுதேர்வு நடத்தி, முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண்களை கழித்து, அவர்களின் அசல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்'' என்று கூறியது.

இது தவிர குஜராத், பீகார், மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் வெட்டவெளிச்சமானது. அதாவது மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வினாத்தாள்களை கசிய விட்டது, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நீட் தேர்வு எழுதிய ஏராளமானவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நீட் தேர்வு முறைகேட்டை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபோத் குமாரை நேற்று மத்திய அரசு பதவியில் இருந்து நீக்கியது. இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற இருந்தது. 

அனைத்து மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன. ஆனால் நேற்று இரவு கடைசி நேரத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்று இரவு திடீரென அறிவித்தது.

முதுநிலை நீட் தேர்வின் செயல்முறையின் தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்யும் நோக்கில் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

திடீரென முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வு எழுத்துவற்காக முக்கிய நகரங்களுக்கு சென்ற மாணவர்கள் வீண் அலைச்சலை சந்தித்ததுடன், பெரும் ஏமாற்றமும் அடைந்தனர். 

நாடு முழுவதும் கடந்த 18ம் தேதி 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வை மத்திய அரசு திடீரென ரத்து செய்தது.  நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும், இது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் கூறியது.

நீட் தேர்வு, நெட் தேர்வு என அனைத்து தேர்வுகளிலும் முறைகேடு நடந்துள்ள தகவல்கள் நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் மீதான நம்பகத்தன்மையையும் அதிகரித்துள்ளன. 

இதனால் மத்திய அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ''ஆர்எஸ்எஸ், பாஜவின் கைகளுக்குள் கல்வி சென்று விட்டதால், முக்கியமான தேர்வுகளில் முறைகேடுகள் அதிகரிக்கின்றன'' என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

இதேபோல் முதல்வர் ஸ்டாலின், ''முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் நேர்மையான, சமமான தேர்வு முறையை கொண்டு வர வேண்டும். உயர்கல்வி தேர்வு முறையில் மாநில உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow