"புதுச்சேரி முதலமைச்சரை பார்த்தால் பரிதாபம்..! மோடி ஒரு வாஷிங்மெஷின்" - கார்கே விமர்சனம்...
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பார்த்து பரிதாபப்படுவதாகவும் அவரை மோடி அரசு தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் எனக் கூறினார். அதுமட்டும் இன்றி புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ஆலைகள், ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து மக்களுக்கு வேலை கொடுப்போம் எனவும் உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய கார்கே, மோடி அரசு குறுக்கு வழியில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பதாகவும் பாஜக கொள்கையை ஏற்காதவர்களை மிரட்டி தொல்லை கொடுத்து அடிபணிய வைப்பதாகவும் குற்றம்சாட்டினார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை வைத்து காங்கிரஸ் அரசுக்கு எப்படி தொல்லை கொடுத்தார்களோ அதேபோல் தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை வைத்து பாஜக தொல்லை கொடுப்பதாகவும் கூறினார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் வேலையை மோடி அரசு செய்து வருவதாகவும் கார்கே குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பார்த்து பரிதாபப்படுகிறேன் எனத் தெரிவித்தார். அவரும் செயல்படவில்லை, அவரை செயல்பட விடாமல் மோடி அரசு தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளதாக விமர்சனம் செய்தார். மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய வாஷிங்மெஷின் எனக் கூறிய மல்லிகார்ஜூன கார்கே, அவர்களுக்கு அடிபணிந்தவர்களை வாஷிங்மெஷின் மூலம் சுத்தமாக்கி விடுகின்றனர் என சாடினார்.
What's Your Reaction?