சாதித்த பீடி தொழிலாளி மகள்... விடா முயற்சியால் வெற்றியை ருசித்தவர்... நான் முதல்வன் திட்டத்தின் சாதனை
மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசியை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகளான ஸ்ரீமதியை, தமிழ்நாடு அரசு பாராட்டியுள்ளது. விடா முயற்சியின் மூலம் வெற்றியை ருசித்து ஆட்சியராகும் அவர், இன்றைய இளைஞர்களுக்கு உதாரணமாக திகழ்வதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகேயுள்ள விஸ்வநாதபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர், பீடி சுற்றும் தொழிலாளி ஸ்ரீனிவாசன். இவர், கடும் வறுமைக்கும் மத்தியில், தனது மகள் ஸ்ரீமதி இம்பா ஸ்டெல்லாவை நன்கு படிக்க வைத்துள்ளார். கணினி படிப்பில் பட்டம் பெற்ற ஸ்ரீமதி, பொருளாதார வசதி இல்லாததால், வீட்டிலிருந்தே படித்து வந்துள்ளார்.
இவர் ஏற்கனவே 2 முறை மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வை எழுதியும், தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 3வது முறையாக குடிமைப் பணிகள் தேர்வுக்கு விண்ணப்பித்த ஸ்ரீமதி, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை பெற்று, தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
குடிமைப் பணிகள் தேர்வின், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதனையடுத்து, மெய்ன்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ரீமதி, இந்திய அளவில் 851ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிடைத்த உதவித்தொகை காரணமாக, பொருளாதார தேவை குறித்த கவலையின்றி படித்ததால் தான், ஸ்ரீமதியால் வெற்றி பெற முடிந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை, முயன்றால் படித்து முன்னேறலாம், வெற்றி முகட்டைத் தொடலாம் என்பதை, ஸ்ரீமதியின் வாழ்க்கையும், விடாமுயற்சியும் இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக, தமிழக அரசு பாராட்டியுள்ளது.
இதனிடையே, வருங்கால ஆட்சியரான ஸ்ரீமதிக்கு, தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் வாழ்த்து தெரிவித்ததோடு, ஸ்ரீமதி குடும்பத்தாருக்கு தேனீர் விருந்தும் கொடுத்து, பாராட்டியுள்ளார்.
What's Your Reaction?