வாக்களிக்க சென்ற பெண் உயிரிழப்பு.. அனாதையாக நிற்கும் குழந்தைகள்.. நிவாரணம் வழங்க கோரிக்கை…

Apr 21, 2024 - 14:03
வாக்களிக்க சென்ற பெண் உயிரிழப்பு.. அனாதையாக நிற்கும் குழந்தைகள்..  நிவாரணம் வழங்க கோரிக்கை…

ராமநாதபுரம் அருகே வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணின் குழந்தைகளுக்கு, அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் 11 மற்றும் 10 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் வெளிநாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து சாந்தி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்

இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வேதாளை வாக்குச்சாவடிக்கு சாந்தி சென்றார். விரலில் மை வைத்து கொண்டிருந்த நிலையில், வாக்குச்சாவடிக்குள் சாந்தி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 
தாயையும், தந்தையும் இழந்ததால் 2 பெண் குழந்தைகளும் ஆதரவற்று தவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு நிவாரண உதவி வழங்க கோரி அவர்களின் உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow