பாமக மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்..  Myv3 ads உரிமையாளர் உட்பட 3 பேர் மீது கோவை போலீஸ் வழக்கு

கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக Myv3 ads உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

May 2, 2024 - 14:07
பாமக மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்..  Myv3 ads உரிமையாளர் உட்பட 3 பேர் மீது கோவை போலீஸ் வழக்கு

கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 ads என்ற செயலியை சக்தி ஆனந்த் என்பவர் நடத்தி வருகிறார். இந்த செயலியின் சேனலை டியூப் சமூக வலைதளத்தில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது. 

இந்த செயலியில் 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், நாள்தோறும் செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் ஆயிரத்து 800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதாமாதம் பணம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்களிடம் ஆசைக்காட்டி ஏமாற்றி அதிகளவு தொகையை வசூலித்து வருவதாக Myv3 ads நிறுவனத்தின் மீது கோவை சைபர் கிரைம் காவல்துறையிடமும், ஆட்சியரிடமும் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து Myv3 ads நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீதும் அவதூறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கணக்கானோர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

அப்போது புகார் அளித்துவிட்டு கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் Myv3 ads உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஒரு வார சிறைக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

இந்த நிலையில் கோவை பாமக மாவட்டச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, Myv3 ads உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த சில நாட்களுக்கு முன் தன்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், கொலை  செய்து விடுவதாக மிரட்டியதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சக்தி ஆனந்த், விஜயராகவன் உள்ளிட்ட 3 பேர் மீது பீளமேடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மைவி 3 ஏட்ஸ், சக்தி ஆனந்த், கொலை மிரட்டல், வழக்குப்பதிவு, பாமக மாவட்டச் செயலாளர், 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow