9 லட்சம் பேர் எழுதிய 'நெட்' தேர்வு திடீர் ரத்து... மத்திய அரசு அறிவிப்பு... என்ன காரணம்?
மத்திய அரசின் அறிவிப்பால் நெட் தேர்வை எழுதியவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கெனவே கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது வெட்டவெளிச்சமானது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: நாடு முழுவதும் நேற்று முன்தினம் 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளது. புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் பணியை பெறுவற்காகவும், ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோஷிப் பெறுவதற்காகவும் ஆண்டுதோறும் யுஜிசி நெட் தேர்வு (UGC NET Exam) நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தில் மேற்பார்வையில் தேசிய தேர்வு முகமை (NTA) இந்த தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் துணை பேராசிரியர் பணியை பெற முடியும். மேலும் ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோ ஷிப் மூலமாக மாதம்தோறும் நிதி உதவி பெற்று முனைவர் பட்டமும் பெறலாம்.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் நெட் தேர்வு நடந்தது. காலை, மதியம் 2 இரண்டு ஷிப்டுகளில் நடந்த இந்த தேர்வு 1,205 மையங்களில் நடந்தது. சுமார் 9,08,580 பேர் நெட் தேர்வை எழுதினார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கணினி வாயிலாக தேர்வு நடந்த நிலையில், இந்த முறை 'ஓஎம்ஆர்' சீட் மூலமாக நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்று இரவு திடீரென அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ''நாடு முழுவதும் 18ம் தேதி நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேசிய சைபர் குற்றப்பிரிவில் இருந்து யுஜிசிக்கு தகவல் கிடைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும். புதிய தேர்வு நடைபெறும் தேதி பின்னர் தனித்தனியாக அறிவிக்கப்படும்'' என்று கூறியள்ளது. தேர்வில் என்னென்ன முறைகேடுகள் நடந்தது? என்பதை மத்திய கல்வி அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் நெட் தேர்வை எழுதியவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கெனவே கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது வெட்டவெளிச்சமானது.
இந்த முறைகேடு தொடர்பாக பீகார், குஜாரத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நீட் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தற்போது நெட் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
What's Your Reaction?