போதை பொருள் வழக்கில் சிக்கிய சிம்பு பட இயக்குநர்… குற்றவாளியாக அறிவிப்பு…
விசாரணைக்கு ஆஜராகததால், இயக்குநர் கிரிஷை தலைமறைவு குற்றவாளி என்று போலீசார் அறிவித்துள்ளனர்
 
                                நடிகர் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கிய கிரிஷ் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தலைமறைவானதால் அவரை குற்றவாளி என போலீசார் அறிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கட்ச்பவுலி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 24-ஆம் தேதி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருள் பயன்படுத்திய விவேக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கொகைன் போதை பொருளை பிரபல திரைப்பட இயக்குனர் கிரிஷ், நடிகைகள் லிசி, ஸ்வீதா ஆகியோர் பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் சோதனை நடத்திய போலீசார் அங்கு போதை பொருள் பயன்படுத்தப்பட்டதற்கு உரிய ஆதாரங்களையும் கைப்பற்றினர். மேலும் கைதான விவேக் செல்போனை ஆய்வு செய்தபோது வாட்ஸ் அப் மூலம் தகவல் அளித்து 3 பேரையும் வரவழைத்து போதை பொருள் வழங்கியதும், கொகைன் போதை பொருளை தலா ஒரு கிராம் ரூ.14,000 விலையில் 3 கிராம் அவர் வாங்கியிருப்பதும் அதற்கு உரிய பணத்தை யுபிஐ மூலம் செலுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் கடந்த புதனன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிரிஷூக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகததால், அவரை தலைமறைவு குற்றவாளி என்று போலீசார் அறிவித்துள்ளனர். இதையடுத்து அவரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ரூ.2000 கோடி அளவிற்கு தமிழக திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர் தலைமறைவாகி இருப்பது திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            