"வந்தது விடிவு..!" ஒரு வாரத்தில் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் இலங்கைக்கு அனுப்பிவைப்பு - தமிழக அரசு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 3 பேர், ஒரு வாரத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும், 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலேயே சாந்தன் உயிரிழந்தார். இந்நிலையில், மற்ற மூவரையும் இலங்கைக்கு அனுப்ப தயாராக இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முன்னதாக தெரிவித்தது.
மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மூவருக்குமான பாஸ்போர்ட்டை இலங்கை துணை தூதரகம் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. தொடர்ந்து, அனுமதி கிடைத்தவுடன், ஒரு வாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?