தைல மரங்களால் குறையும் நிலத்தடி நீர்மட்டம்... சட்டப் போராட்டம், களப் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

May 11, 2024 - 21:27
தைல மரங்களால் குறையும் நிலத்தடி நீர்மட்டம்... சட்டப் போராட்டம், களப் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்களை அகற்றுவதற்கு சட்டப்பூர்வமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் தீர்வு காண விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையின் அளவு சராசரியாக ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு அரசின் வனத்தோட்டக் கழகம் சார்பாக வளர்க்கப்படும் தைலமரங்களே காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தமிழக அரசு தைல மரங்களையும் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அகில இந்திய விவசாய சங்கப் பொதுச் செயலாளருமான தனபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் "மாவட்டத்தில் வனத்தோட்ட கழகம் சார்பாக சுமார் 50,000 ஏக்கருக்கு மேல் தைல மரங்கள் வளர்க்கும் நிலையில், தைல மர காட்டில் மழை நீர் வெளியேறாதவாறு குழிகள் அமைத்து நீரை அதிகாரிகள் தடுப்பதால் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

விவசாயிகள் தாக்கல் செய்த மனு மீது, கருவேல மரங்களை அகற்றவும், தைல மரங்களை இனி பயிரிடக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கில், தைல மரங்களை வளர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது. எனவே தற்போது நடைபெற்ற கூட்டத்தில் ஒருபுறம் நீதிமன்றம் மூலமாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும், மறுபுறம் போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 100 ஆண்டு கால கனவுத் திட்டமான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளையும் இணைக்கவும், தங்கள் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது எனக் கோரி நீதிமன்றத்தை நாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர், தமிழக அரசு காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என தனபதி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow