சவுக்கு சங்கர் அதிரடி கைது.. பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு.. அராஜகம் என்கிறார் இபிஎஸ்

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.

May 4, 2024 - 07:48
சவுக்கு சங்கர் அதிரடி கைது.. பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு.. அராஜகம் என்கிறார் இபிஎஸ்

தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு சங்கர். அரசியல் விமர்சகரான இவர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.  தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக திமுக அரசின் செயல்பாடுகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து சவுக்கு சங்கர் தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

கடந்த ஜனவரி  26ம் தேதி விமான நிலைய எதிர்ப்பு குழு சார்பில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்க அழைப்பு வந்த நிலையில் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற சவுக்கு சங்கருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் தனிநபராக மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் கூடுதலாக சிலருடன் அங்கு கார்களில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அந்த சமயத்தில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சவுக்கு சங்கர் போராட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் சுங்குவார்சத்திரம் போலீசார் அதிரடியாக வழக்குப்திவு செய்துள்ளனர். அதில் ஒன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாக உள்ளது.அதாவது சவுக்கு சங்கர் மீது சட்டப்பிரிவு 147 (கலவரம் செய்தல்), 294 பி (அவதூறு பரப்புதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 506 (1) என்ற கொலை மிரட்டல் என்பது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்காகும். 

அப்போதே சவுக்கு சங்கர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் தேனியில் சவுக்கு சங்கரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில்  பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.

முன்னதாக  சவுக்கு சங்கர் ஊடகத்தில் பணியாற்றும் ஊழியர்களை திமுக அரசு கைது செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், சவுக்கு சங்கருக்கு ஆதரவாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு எனது  கண்டனம்.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் மு.க.ஸ்டாலின்  அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு  முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow