உலக்கையால் ஒரே அடி... மனைவியை கொன்று விட்டு கணவர் எடுத்த விபரீத முடிவு.. தென்காசியில் அதிர்ச்சி
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு தானும் விஷம் அருந்தி கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் கீழத்திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், திருவேங்கடம் பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி. இருவருக்கும் கடந்த சில நாட்களாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி இரவு, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி, மனைவி சீதாலட்சுமியை அங்கிருந்த உலக்கையால் தலையில் ஓங்கி அடித்தார். இதில், நிலைகுலைந்த சீதாலட்சுமி ரத்த வெள்ளத்திற்கு இடையே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவியை கொன்ற கருப்பசாமியும் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. ஒரே வீட்டில் கணவனும் மனைவியும் பிணமாகக் கிடந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் போலீசுக்குப் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துரையினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கருப்பசாமியை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இறந்த சீதாலட்சுமி உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னையால் கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?