தோண்ட தோண்ட தெய்வங்கள்.. வெளிப்பட்ட முருகன்.. அரியலூரில் நிகழ்ந்த அதிசயம்.. அகழாய்வு செய்ய கோரிக்கை
அரியலூர் அருகே பழைய கோயிலை அகற்றிவிட்டு புதிய கோயில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது முருகன் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த கூவத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் சேதமடைந்த நிலையில் அதனை அகற்றிவிட்டு ரூ.12 கோடி மதிப்பில் புதிய கோயில் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் கற்களை அகற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென பூமிக்கு அடியில் இருந்து முருகன் கற்சிலை ஒன்று வெளிப்பட்டது. வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் இந்த முருகன் சிலை, 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவிய நிலையில், ஏராளமான பக்தர்கள் சிலையை காண குவிந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து முருகன் சிலையை பாலாலயம் செய்யப்பட்ட கோவிலுக்குள் வைத்து அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
அப்பகுதியில் கடந்த 2 மாதங்களில் மூன்று சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இன்னும் பூமிக்கு அடியில் ஐம்பொன் மற்றும் கற்சிலைகள் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால் தொல்லியல் துறையினர் அப்பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?