வெடிகுண்டு மிரட்டல்... சித்திரை திருவிழாவில் பதற்றம்...  ஸ்தபதிக்கு கைவிலங்கு போட்ட போலீஸ்

Apr 25, 2024 - 17:00
வெடிகுண்டு மிரட்டல்... சித்திரை திருவிழாவில் பதற்றம்...  ஸ்தபதிக்கு கைவிலங்கு போட்ட போலீஸ்

தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 14-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்த மர்ம நபர், நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்பக்குளம் அருகே வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து தெப்பக்குளம் மற்றும் கோயில் முழுவதும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் பகுதியை சேர்ந்த சிங்காரவேலு (35) என்பது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பேராவூரணி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, அங்கு, தான் ஸ்தபதியாக பணிபுரிந்ததாக கூறியுள்ளார். மேலும், தேரோட்ட நிகழ்ச்சியை யூடியூப் சேனலில் பார்த்துக்கொண்டிருந்தபோது, மதுபோதையில் தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிங்காரவேலு மீது வழக்குப்பதிவு செய்த பேராவூரணி காவல்துறையினர், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow