குழந்தைகள் மருத்துவமனையில் பாம் வெடிக்கும்.. மிரட்டல் இ மெயில்.. மர்ம மனிதர்களை தேடும் போலீஸ்
இரண்டு தனிப்படைகள் இதற்காக அமைத்து தீவிரமாக தேடி வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் நல மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறையினர் தனிப்படை அமைத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பள்ளிகளுக்கும் சில பொது இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டு, காவல்துறையினர் அவற்றை ஆய்வு செய்து, போலியான தகவல் என்று உறுதிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குழந்தைகள் நல மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மான ஈ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மெயிலின்படி, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காமாட்சி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனே காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதன்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சைபர் கிரைம் போலீசார் ஜி மெயில் மூலம் மெயில் வந்த ஐடியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக வரக்கூடிய புரோட்டான் மெயில் மூலம் அல்லாது, நேரடியாக ஜிமெயில் மூலமாகவே இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புரோட்டான் மெயில் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மாநிலத்திற்கு சென்று சைபர் கிரைம் போலீசார் அந்த மர்ம நபரை தேடியதாகவும், தற்போதும் இரண்டு தனிப்படைகள் இதற்காக அமைத்து தீவிரமாக தேடி வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?