நண்பனின் மனைவியுடன் நெருக்கம்... 2 ஆண்டுகளாக நீடித்த மர்மம்... தோண்டி எடுக்கப்பட்ட உடல்...

இரண்டு ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த கொலை சம்பவம்

Apr 23, 2024 - 12:43
நண்பனின் மனைவியுடன் நெருக்கம்... 2 ஆண்டுகளாக நீடித்த மர்மம்...  தோண்டி எடுக்கப்பட்ட உடல்...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த டெய்லரை கொன்று புதைத்துவிட்டு 2 ஆண்டுகளாக நாடகமாடிய டெய்லரின் மனைவி, நண்பர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கொடுங்குளத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்-ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஸ்ரீகாந்த் வீட்டைவிட்டு சென்றதாக கூறப்பட்டது. ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு சென்று 2 ஆண்டுகள் ஆகிய நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு ஓட்டுப்போட கட்டாயம் வருவார் என ஸ்ரீகாந்திற்கு தெரிந்தவர்கள் எதிர்பார்த்த நிலையில் வராததால், ஸ்ரீகாந்தின் நண்பரான இளையராஜாவிடம் கேட்டுள்ளனர். அப்போது அரை போதையில் இருந்த இளையராஜா முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த அவர்கள், போலீசுக்கு போன்போட்டு விஷயத்தை கூறியுள்ளனர். இதையடுத்து, இளையராஜாவை அழைத்து போலீசார் கேட்க வேண்டிய விதத்தில் கேட்க அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், இளையராஜாவுக்கும், ஸ்ரீகாந்த் மனைவி ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஸ்ரீகாந்த் இல்லாத நேரத்தில் அடிக்கடி தனிமையில் இருந்ததும், ஒருகட்டத்தில் இந்த விஷயம் ஸ்ரீகாந்திற்கு தெரியவர அடிக்கடி  தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஆர்த்தி, இதுகுறித்து இளையராஜாவிடம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து மாடுபிடிக்க சந்தைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி  ஸ்ரீகாந்தை வலுக்கட்டாயமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிறுவாச்சி கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் இளையராஜா. அதன்பின் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று ஸ்ரீகாந்திற்கு அளவுக்கு அதிகமாக இளையராஜா மது ஊற்றிக் கொடுத்துள்ளார். ஸ்ரீகாந்திற்கு போதை தலைக்கேற, இளையராஜா, அவரது நண்பர் அஜித் குமார் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த கூலிப்படையை சேர்ந்த ஆசைமுத்து, சமய துரை ஆகியோர் சேர்ந்து அவரை வெட்டிக் கொன்று அங்கேயே புதைக்கவும் செய்துள்ளனர். 

இதையடுத்து இளையராஜா மற்றும் அஜித் குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், நிகழ்விடத்திற்கு அழைத்து சென்று, தேவகோட்டை தாசில்தார் மற்றும், திருவாடானை டிஎஸ்பி முன்னிலையில் ஸ்ரீகாந்த் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டியுள்ளனர். அப்போது ஸ்ரீகாந்தின் சடலம் அழுகி மண்ணோட மண்ணாகியநிலையில் எழும்புக் கூடும், அவர் கடைசியாக அணிந்திருந்த ஆடையும் மட்டும் கிடைத்துள்ளது.

 இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகிய சிவகங்கையைச் சேர்ந்த கூலிப்படையினர் ஆசைமுத்து மற்றும் சமய துரையை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த நண்பனையே கொலை செய்து, 2 ஆண்டுகளாக நாடகமாடி நண்பரின் மனைவியுடன் கள்ளத்தனமாக வாழ்க்கை நடத்தி வந்த செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow