சித்திரை திருவிழா...! பரமக்குடி, மானாமதுரை வைகையில் இறங்கிய அழகர்.. பக்தர்கள் ஆனந்த தரிசனம்

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்த அதே நேரத்தில் வைகை ஆறு ஓடும் மானாமதுரை, பரமக்குடியில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

Apr 23, 2024 - 12:40
சித்திரை திருவிழா...! பரமக்குடி, மானாமதுரை வைகையில் இறங்கிய அழகர்.. பக்தர்கள் ஆனந்த தரிசனம்


சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மதுரையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. அதே போல சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் பூப்பல்லாக்கில் அரக்கு பட்டுடுத்தி வைகை ஆற்றில்  இறங்கினார். மானாமதுரை வைகை ஆற்றில் வெண்பட்டு   உடுத்தி வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கியதை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில்  அதிர் வேட்டுகள் முழங்க " கோவிந்தா கோவிந்தா " என்ற முழக்கத்திற்கிடையே  வெண்பட்டுடுத்தி வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது . நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. 

நேற்று இரவு தியாக விநோத பெருமாள் கோயிலுக்கு பூப்பல்லக்கில் அழகர் வந்தார். இன்று அதிகாலை கோயிலில் இருந்து புறப்பட்ட அழகர் வழிநெடுகிலும் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளினார். ஆனந்த வல்லி சோமநாதர் ஆலய வாசலில் வீர அழகருக்கு வெண் கொற்ற குடை வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு  வெண் பட்டு உடுத்தி பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்தின் இடையே வீர அழகர் இறங்கினர். 

கடும் வெயில் இருந்த போதிலும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் காத்திருந்து  தரிசனம் செய்தனர். பெண்பட்டு உடுத்தி இறங்கியதால் மழை பொழிந்து வாழ்வில் வளம் பெறும், விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். சித்திரை திருவிழாவிற்காக விரதம் இருந்த பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கி மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தினர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு " நிலாச்சோறு " திருவிழா நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம்  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் இரவில் சுந்தர்ராஜ பெருமாள் ஆடி வீதிகளில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி அருள் பாலித்த சுந்தர்ராஜ பெருமாள் இன்று அதிகாலை வான வேடிக்கைகள் மற்றும் மேள தாளங்கள் முழங்க பூப்பல்லக்கில் ஏராளமான தீவட்டிகள் முன்செல்ல கள்ளழகர் அரக்கு பட்டு உடுத்தி  வெள்ளி கிண்ணத்தில் அவல் பாயசம் சாப்பிட்டுக்கொண்டு  கொண்டு பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார். வைகை ஆற்றில் சுந்தர்ராஜ பெருமாள் இறங்கி அருள்பாலித்ததை ஏராளமானோர் ஆனந்தமாக தரிசனம் செய்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow