திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவருக்கு விழுந்த அடுத்த இடி.. இந்த முறை ED..
பணமோசடி தொடர்பாக ஷேக் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்கம் சந்தேஷ்காலியில் நிலமோசடி செய்து பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் மீது பணமோசடி வழக்கை அமலாக்கத்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 5ம் தேதி ரேஷன் ஊழல் தொடர்பாக சோதனை மேற்கொள்ளச் சென்ற அமலாக்கத்துறையினரை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள் அடித்து விரட்டினர். தொடர்ந்து தேடப்பட்டு வந்த அவர் தலைமறைவானார். இந்நிலையில் நில அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், கணவர்களை அடித்து சித்ரவதை செய்து சொந்தக் கட்சியின் பெண் தொண்டர்களிடம் கட்சி அலுவலகத்தில் வைத்தே அத்துமீறியதாகவும், ஷேக் ஷாஜகான் மீது குற்றம்சாட்டப்பட்டது.ஷிபு ஹர்சா, உத்தம் சர்தார் ஆகிய கூட்டாளிகளுடன் துணையுடன் தங்களை துன்புறுத்தியதாகக் கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய நிலையில், போராட்டக்காரர்களை போலீசார் காட்டுமிராண்டித்தனமாக அடித்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை ஷேக் ஷாஜகான் கைது செய்யப்படாததால், பொதுவெளியில் நடமாடவே அச்சம் கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர்.இந்நிலையில் அவருக்குச் சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.இந்நிலையில் பணமோசடி தொடர்பாக ஷேக் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?