"விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக".. தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்..
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு விவசாய சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப், ஹரியானா விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போலீஸ் தாக்குதலில் இளம் விவசாயி பலியானதை கண்டித்தும் தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே டெல்லி எல்லையை முற்றுகையிடும் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் ஈடுபட்டனர்.
பஞ்சாப்-ஹரியானா எல்லையான கனோரியில் தடுப்புகளை நோக்கி விவசாயிகள் முன்னேறி சென்ற நிலையில், போலீசார் ரப்பர் குண்டு தாக்குதலில் பஞ்சாப் மாநிலம் பதின்டாவை சேர்ந்த 21 வயதான விவசாயி உப்கரண் சிங் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு விவசாய சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும், இளம் விவசாயி பலியாக காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.
What's Your Reaction?