வளையாத செங்கோல்..மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. மைக் ஆஃப் செய்த சபாநாயகர்
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த தலைவர்கள் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, மக்களவையில் திருமாவளவன் கேள்வி எழுப்பினர். திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, மைக் அணைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற மக்களவையின் புதிய சபாநாயகராக தேர்வான ஓம் பிர்லாவிற்கு வாழ்த்து தெரிவித்து, விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இரண்டாவது முறையாக அவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு, நான் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும், இந்தியா கூட்டணி சார்பிலும் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோல் அதிகாரத்தின் அடையாளம் அல்ல, நீதி தவறாமைக்கு அடையாளம். கடந்தமுறை போன்று ஒரு சார்பாக செயல்படாமல் அனைவருக்கும் வாய்ப்பு தரவேண்டும். கடந்தமுறை பல்வேறு மசோதாக்களை பண மசோதா எனக்கூறி ஆளுங்கட்சி அறிமுகப்படுத்தியது.எது பண மசோதா என்று தீர்மானிக்கும் அதிகாரம் உங்களிடம் மட்டும் தான் உள்ளது. அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா காந்தியடிகள் மற்றும் மகாத்மா ஜோதி பாபு பூலே போன்ற மாபெரும் தலைவர்களின் சிலையை ஒரு ஓரமாக கொண்டு போய் வைத்துள்ளீர்கள். காந்தி சிலையை மீண்டும் பழைய இடத்தில் நிறுவ வேண்டும் என்று பேசினார்.
அப்போது, காந்தி, அம்பேத்கர் சிலைகள் இடமாற்றம் குறித்து திருமாவளவன் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது. மக்களவையில் திருமாவளவன் பேசியபோது மைக் அணைக்கப்பட்டதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். ஓம்பிர்லாவை வாழ்த்தி பேசும்போதே எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வ விமர்சனத்தை பொறுத்துக்கொள்ள மறுப்பதாக புகார் தெரிவித்தனர்.
What's Your Reaction?