3-வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு! சென்னையில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 3-வது நாளாக தொடர்கிறது.
தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அரசியல் கட்சிகள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் உண்ணிப்பாக கவனித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி மக்களுக்கு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவான்மியூர், அபிராமபுரம், ஏழுகிணறு பகுதிக்கு உட்பட சில பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டதில் சில ஆவணங்கள் சிக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், அபிராமபுரத்தில் உள்ள ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய இணை தலைமை பொறியாளர் தங்கவேலு ஆகியோரது வீடுகளில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் இன்றும் (ஏப்ரல் 7) சோதனை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?