சிறுத்தை மலத்தைக் கண்டெடுத்த அதிகாரிகள்.. சிறுத்தைய எப்போ சார் பிடிப்பீங்க? அச்சத்தில் மயிலாடுதுறை மக்கள்

Apr 7, 2024 - 11:29
சிறுத்தை மலத்தைக் கண்டெடுத்த அதிகாரிகள்.. சிறுத்தைய எப்போ சார் பிடிப்பீங்க? அச்சத்தில் மயிலாடுதுறை மக்கள்

மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்கும் பணி ஐந்தாவது நாளாக தொடரும் நிலையில், முடியுடன் உள்ள மலத்தைக் கைப்பற்றியுள்ள வனத்துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி, செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்தபோது, கடந்த 3-ம் தேதி அப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து என்ற காட்சி சென்சார் கேமராவில் பதிவானது. அதன் அடிப்படையில் சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,  கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று இரவு ஆரோக்கியநாதபுரம், மயிலாடுதுறை ரயில்வே நிலையம், அசிக்காடு, மறையூர், கோவங்குடி, ஊர்க்குடி ஆகிய ஆறு இடங்களில் ஏழு கூண்டுகள் வைக்கப்பட்டு, சிறுத்தையைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், எந்தக் கூண்டிலும் சிறுத்தை இதுவரை சிக்காத நிலையில், மயிலாடுதுறை ரயில்வே  நிலையம் அருகே ரயில்வே தண்டவாளம் பாலம் கீழே சிறுத்தையின் நடமாடிய தடங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, கால் தடங்கள் எதுவும் தெளிவாகக் கிடைக்காத நிலையில், காவிரி ஆற்றில் முடியுடன் கூட மலத்தை வனத்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அதனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

தொடர்ந்து 5 நாட்களாக தீவிரமாக தேடியும், வனத்துறையின் எந்தக் கூண்டிலும் சிறுத்தை இன்னும் சிக்காததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow