மாமல்லபுரம் கடலில் மீண்டும் உயிர்பலி!! மாயமான கல்லூரி மாணவர்கள்...

Mar 2, 2024 - 21:58
மாமல்லபுரம் கடலில் மீண்டும் உயிர்பலி!! மாயமான கல்லூரி மாணவர்கள்...

ஆந்திராவில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கடலில் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மற்றும் சித்தூர் மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர் என இரு குழுக்களாக இன்று (மார்ச் 2) மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் சுற்றி பார்த்த கல்லூரி மாணவர்கள் இறுதியாக கடற்கரைக்கு சென்று கடலில் குளித்த போது கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் 10 மாணவர்களை ராட்சத அலை கடலுக்கு இழுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. அவர்களுடன் கரையில் இருந்த சக மாணவர்கள் தங்கள் நண்பர்களை காப்பாற்ற கோரி கூச்சல் போடவே, அங்கிருந்த மீனவர்கள் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 5 மாணவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். 

இதில் நலகாம்பள்ளியை சேர்ந்த விஜய் என்ற மாணவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு மாயமான அனந்தபூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பெத்துராஜ்(26), ஷேசாரெட்டி(25), நலகாம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மவுனீஷ்(18), பார்த்துஷா(19) ஆகிய  4 மாணவர்கள் மாயமாகினர். இதையைடுத்து காவல்துறையினர், செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் சென்னை மெரினா மீட்பு குழு ஆகியோர் கடலில் மாயமான  மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அதிகாரி ரமேஷ் பாபு, "காலையிலிருந்து 8 மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உதவியாக சென்னை மெரினா மீட்பு குழுவும் களத்தில் இறங்கி உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 20 பேர் கொண்ட குழுவாக கடலில் மாயமான மாணவர்களை தேடி வருகிறோம். கூடுதலாக கடலோர காவல் படையும், ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்" என தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow