பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு!

”ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப் பட்டதில் மகிழ்ச்சி. இதனால் தற்கொலைகளும், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கும் முடிவு கட்டப்படும்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு!
pmk leader anbumani welcomes strict online gambling laws passed by parliament

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று பாமகவின் அன்புமணி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் விவரங்கள் பின்வருமாறு-

”சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. அதனால், தமிழகத்தில் இரு முறை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டும் அதனால் பயன் இல்லை. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை சூதாட்டம் அல்ல, அவை திறன் விளையாட்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த சூதாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திமுக அரசு இன்னும் விசாரணைக்கு கொண்டு வராததால்,  ஆன்லைன் சூதாட்டங்களையும் தடுக்க முடியவில்லை; அதனால்  நிகழும் தற்கொலைகளையும் தடுக்க முடியவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் 96 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றையும் சூதாட்டம் என்று அறிவித்து அவற்றை தடை செய்வதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதுடன், உச்சநீதிமன்றத்திலும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும்,  பலர் தற்கொலை செய்து கொள்வதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும்” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow