பிரதமர் மோடி முதல் விவசாயிகளைக் கொன்ற ஆசிஷ் தந்தை அஜய் மிஸ்ரா வரை !! கவனிக்கப்பட வேண்டிய பாஜக வேட்பாளர்கள்..

மக்களவைத் தேர்தலுக்கான 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ள நிலையில், 33 சிட்டிங் எம்.பிக்களுக்கு வாய்ப்பளிக்கப்படாத அதே நேரத்தில் அஜய் மிஸ்ரா, ஹேமமாலினி உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Mar 3, 2024 - 08:02
பிரதமர் மோடி முதல் விவசாயிகளைக் கொன்ற ஆசிஷ் தந்தை அஜய் மிஸ்ரா வரை !! கவனிக்கப்பட வேண்டிய பாஜக வேட்பாளர்கள்..

ஒரு சில வாரங்களில் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 16 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கான 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பட்டியலின்படி, 2014, 2019 தேர்தல்களில் போட்டியிட்ட அதே உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், வாரணாசி மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய காத்திருப்பதாகவும் பிரதமர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் குஜராத்தின் காந்திநகரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்துக்கு பிரதமர் நேரில் சென்றிருந்த நிலையில், சுரேஷ் கோபிக்கு திருச்சூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலில் இருந்து விலகப் போவதாக கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அறிவித்ததால், அவர் கடந்த முறை போட்டியிட்ட டெல்லி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் போட்டியிடுகிறார். 

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் போட்டியிட மத்திய இணையமைச்சர் அஜஸ் மிஸ்ராவுக்கு மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அஜய் மிஸ்ரா மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் விவசாயிகள் 4 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தியை தோற்கடித்த அதே அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும், கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற மாதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினியும் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மத்திய அமைச்சர்கள் கிரிண் ரிஜிஜு அருணாச்சலப் பிரதேசம் மேற்கு தொகுதியிலும், கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூரிலும், கிஷண் ரெட்டி செகந்திராபாத்திலும், ராஜீவ் சந்திர சேகர் திருவனந்தபுரத்திலும், முரளிதரன் ஆட்டிங்காலிலும், ராஜ்நாத் சிங் அமேதியிலும் போட்டியிடுகின்றனர். விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா குணாவிலும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா போர்பந்தரிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

34 அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, 2 முன்னாள் முதலமைச்சர்கள் கொண்ட இந்த பட்டியலில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 57 பேர், பட்டியலினத்தவர் 27 பேர், பழங்குடியினத்தவர் 18 பேர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 51, மத்தியப்பிரதேசத்தில் 24, மேற்குவங்கத்தில் 20, குஜராத் - ராஜஸ்தானில் தலா 15, கேரளாவில் 12, அசாம் - ஜார்கண்ட் - சத்தீஸ்கரில் தலா 11, தெலங்கானாவில் 9, டெல்லியில் 5, உத்தரகாண்டில் 3, ஜம்முகாஷ்மீர் - அருணாசலப்பிரதேசத்தில் தலா 2, கோவா - திரிபுராவில் தலா ஒரு தொகுதி என 195 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 195 பேரில் 33 சிட்டிங் எம்.பிக்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow