வணிகநோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது.. பழநி கிரிவலப்பாதை வழக்கில் நீதிபதிகள் உறுதி...
பழநி கிரிவீதியில் பட்டா உள்ளவர்களை அனுமதிப்பது மற்றும் கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பக்தர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பழநி கிரிவல வீதியில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் வணிக நோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளோம் என்று கூறினர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் சோதனைச்சாவடி பணிகளுக்கு தேவஸ்தானம் கோரும் போலீஸ் பாதுகாப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எந்தவித தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் பழநி முருகன் கோவில் மற்றும் கிரி வீதிகளில் பட்டா வைத்திருப்பவர்கள் தங்கள் இடத்திற்கு சென்று வருவது தொடர்பாக வருவாய் கோட்டாச்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கிரிவீதியில் உள்ள 120 ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?