தொகுதிப்பங்கீடு குறித்து தி.மு.க-வி.சி.க இன்று பேச்சுவார்த்தை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதியம் 3 மணி அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Feb 12, 2024 - 07:17
Feb 12, 2024 - 11:06
தொகுதிப்பங்கீடு குறித்து தி.மு.க-வி.சி.க இன்று பேச்சுவார்த்தை

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க - வி.சி.க இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கட்சிகளிடையே கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க மற்றும் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு தலைமையில் மதியம் 3 மணி அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில், விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதல் தொகுதிகளை கேட்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், பொதுத் தொகுதியில் போட்டியிடவும் விருப்பம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதே போன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதே தொகுதியை இம்முறையும் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 3 தொகுதிகளை விருப்பப்பட்டியலாக கொடுக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow