Thug Life: தக் லைஃப் ஸ்பாட்டில் விபரீதம்... ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பிரபலம்!
மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த விபத்தில் பிரபல நடிகருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. நாயகனுக்குப் பின்னர் தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது இக்கூட்டணி. இவர்களுடன் சிம்பு, ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் என முக்கியமான பிரபலங்களும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளனர். கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் தக் லைஃப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த விபத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மல்லுவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜோஜூ ஜார்ஜ், தற்போது தமிழிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 44வது படத்திலும் ஜோஜூ ஜார்ஜ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தக் லைஃப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளை ஷூட் செய்துள்ளார் மணிரத்னம். அதில் ஜோஜூ ஜார்ஜ்ஜும் பங்கேற்றுள்ளாராம்.
அதாவது ஹெலிகாப்டரில் இருந்து ஜோஜூ ஜார்ஜ் ஜம்ப் செய்யும் காட்சி என சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் ஜோஜூ ஜார்ஜ்ஜின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஜோஜூ ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இனிமேல் காயம் குணமடைந்த பின்னர் தான் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவரும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினர். அதன் பின்னர் தான் சிம்பு, அசோக் செல்வன் ஆகியோர் இப்படத்தில் கமிட்டானதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் ஜோஜூ ஜார்ஜ்ஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதேநேரம் ஜோஜூ ஜார்ஜ் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவார் எனவும், அதன் பின்னர் தக் லைஃப் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பாரா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அந்தமானில் நடைபெற்று வருகிறது. இதில் சூர்யாவுடன் ஜெயராம், பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?