Ban Maharaj: மஹாராஜ் படத்துக்கு தடை... அமீர்கான் மகனுக்கு எதிராக போர்க்கொடி?
அமீர்கான் மகன் ஜூனைத் கான் ஹீரோவாக அறிமுகமாகும் மஹாராஜ் படத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் மிகப் பெரிய தோல்வியடைந்தது. ரிலீஸுக்கு முன்னர் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மத ரீதியாக அமீர்கானுக்கு எதிராக பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதனால் திரையரங்குகளில் ரிலீஸான லால் சிங் சத்தா படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த அமீர்கான், தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமீர்கானின் மகன் ஜுனைத் கான் மஹாராஜ் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை மல்ஹோத்ரா பி சித்தார்த் இயக்கியுள்ளார். ஜுனைத்கான் உடன் ஜெய்தீப் அஹ்லாவத், ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். மஹாராஜ் திரைப்படம் நாளை (ஜூன் 14) முதல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. ஆனால், இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என தற்போது போர்க்கொடி எழுந்துள்ளது.
மஹாராஜ் திரைப்படம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் நடந்த ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டி, சாதுக்கள் பற்றிய தவறான பிம்பத்தை இந்தப் படம் உருவாக்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுமாதிரியான படத்தில் ஏன் தனது மகன் ஜுனைத் கானை அமீர்கான் நடிக்க வைக்கிறார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், #BoycottNetflix, #BanMaharaj என்ற ஹேஷ்டேக்களை பயன்படுத்தி இந்தப் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மஹாராஜ் படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அமீர்கானை தொடர்ந்து அவரது மகன் ஜுனைத் கானும் தற்போது நெட்டிசன்களால் டார்க்கெட் செய்யப்பட்டுள்ளார். அமீர்கானின் நீண்ட நாள் கனவு மகாபாரதம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால், ஆதிபுருஷ் படத்தில் சயிப் அலிகான், அனுமார் வேடத்தில் நடித்ததற்கு கடும் எதிர்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மஹாராஜ் படத்துக்கு தடை விதிக்கக் கூடாது எனவும், அமீர்கானுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். முன்னதாக ஷாருக்கானின் பதான் திரைப்படம் ரிலீஸாகும் போதும் அதற்கு எதிராக பாய்காட் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. ஆனால் அதனையும் மீறி ஷாருக்கின் பதான், ஜவான் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?